மாணவர்கள் கல்வி வல்லமை பெற்று இந்த மாநிலம் பயன்பெரும் வகையில் வாழ வேண்டும்

Report Print Navoj in கல்வி
0Shares
0Shares
Cineulagam.com

மாணவர்கள் கல்வி எனும் வல்லமையைப் பெற்றுக் கொண்டு இந்த மாநிலம் பயன்பெரும் வகையில் வாழ வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

வந்தாறுமூலை கணேசா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முகப்புவாயில் திறப்பு நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் சித்திரவேல் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

எமது அமைச்சினால் நாங்கள் இந்த பாடசாலையை தவிர்த்து மேலும் மூன்று பாடசாலைகளுக்கு முகப்பு வாயில்கள் அமைத்துக் கொடுத்திருக்கின்றோம்.

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம், சம்பூர் மகா வித்தியாலயம், கல்முனை வெஸ்லி கல்லூரி போன்றவற்றிற்கு எமது விவசாயக் கண்காட்சி செயற்திட்டத்தின் மூலம் முகப்பு வாயில் அமைத்துக் கொடுத்துள்ளோம்.

ஆனால் இது அவ்வாறு அல்ல. மாகாண அமைச்சர்களுக்கான பிரத்தியேக செலவீன ஒதுக்கீடுகளில், எனக்கான ஒதுக்கீட்டில் செலவீனங்களைக் குறைத்து அதனை மீதப்படுத்தி, ஊழியர்களின் பங்களிப்பின் மூலம் இன்று இந்த கணேசா வித்தியாலயத்திற்குரிய முகப்பு வாயிலினை அமைப்பதற்கு நிதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் கல்வி எனும் வல்லமையைப் பெற்றுக் கொண்டு இந்த மாநிலம் பயன்பெரும் வகையில் வாழ வேண்டும். நம்முடைய வாழ்விற்கு நமக்கு முன்னே சென்றவர்கள் வழிகாட்டிகளாக இருக்கின்றார்கள்.

நாங்கள் இலக்கு மற்றும் இலட்சியத்தை நோக்கி வாழ வேண்டும். அதற்கு நமது முன்னோர்களை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

எமது ஊரில் உள்ள வளங்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் ஒரு நல்ல இலட்சியத்தை மனதிற்குள் பதித்துக் கொண்டால் அந்த இலட்சியத்தை அடைவதற்கு நிச்சயம் காலம் வழிகாட்டும்.

பெரியவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பலர் எம்மை வேறு விதங்களில் வாழ்த்துகின்றார்கள். அவர்கள் வாழ்த்தட்டும் அந்த வாழ்த்துக்களும் எங்களுக்கு கட்டாயம் தேவை.

ஏனெனில் அந்தச் சொற்களும் எங்களைக் இன்னும் கூடுதலாக கவனமெடுத்து வேலை செய்வதற்குத் தூண்டும்.

தற்போதைய நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஆட்சிப் பொறுப்பைப் பெற்றமையால் தான் இவ்வாறான நிலைமைகள் தோன்றியிருக்கின்றன என்பதையும் மக்கள் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்