இலங்கை கிரிக்கெட்டின் முன்னணி நடுவர் அசோகா டி சில்வா, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு தொழில்முறை நடுவர்களை நியமிக்கவுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1985 முதல் 1992ஆம் ஆண்டு வரை இலங்கை அணிக்காக விளையாடியவர் அசோகா டி சில்வா. இவர், 10 டெஸ்ட் மற்றும் 28 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அதன் பின்னர், களநடுவராக பொறுப்பேற்று ஆசிய துணைக்கண்டத்தில் மிகவும் பிரபலமானார்.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் நடுவர்களின் மேலாளராக இருக்கும் டி சில்வா, PCU எனப்படும் தொழில்முறை கிரிக்கெட் நடுவர்களின் அமைப்பிற்கும் தலைவராக உள்ளார்.
இந்நிலையில் PCU-யில் உள்ள நடுவர்களை உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் வகையில், தரம் உயர்த்த டி சில்வா முடிவு செய்துள்ளார். இந்த முடிவிற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து நடுவர் ஒருவர் கூறுகையில், ’PCU-விற்கு என சரியான அமைப்புமுறை கிடையாது. அந்த அமைப்பு உரிய முறையில் தேர்வுகள், கருத்தரங்குகளை நடத்துவது இல்லை.
அதனால் தான், டி சில்வா அந்த அமைப்பில் இருந்து உள்ளூர் போட்டிகளுக்கு நடுவர்களை களமிறக்க உள்ளார்’ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், PCU-வில் உள்ள பெரும்பாலான நடுவர்கள் உடல்தகுதியற்றும், பெரிய வயிறை கொண்டும் இருக்கிறார்கள் என புறக்கணிக்கப்பட்ட நடுவர் ஒருவரும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.