பிரபல கிரிக்கட் வீரர் லசித் மாலிங்க மற்றும் முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க ஆகியோருக்கு தமது அரசாங்கத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.
முகநூலில் பின்வருமாறு கூறியுள்ளார்…
உலகின் எந்தவொரு நாட்டிலும் விளையாட்டு வீர, வீராங்கனைகளுடன் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் மோதிக் கொள்வதில்லை.
எமது நாட்டின் நற்பெயரை உலகிற்கு எடுத்துச் சென்ற விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு எமது சமூகத்தினால், எமது அரசாங்கத்தினால், எமது நாட்டினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று கருதுகின்றேன்.
இலங்கையை சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்றவர்களே இவர்களாவர்.
இலங்கையின் பிரபல்யமான நடிகர் என்ற விருதினைப் பெற்றுக் கொண்டேன், எனினும் விமான நிலையத்திற்கு வெளியே வேறும் ஓர் நாட்டுக்குச் சென்றால் என்னை எந்தவொரு நபருக்கும் தெரியாது.
எமது நாட்டை சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்ற நபர்களை நாம் மரியாதையுடன் நடத்த வேண்டும்.
பத்திரிகைகளின் ஊடாக மோதிக் கொள்ளும் அனைவரும் எமது நண்பர்களேயாவர்.
கடந்த காலத்தில் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை செய்யப்பட்டார்.
மாலிங்க மீதான அழுத்தமும் ஒர் வகையிலான சித்திரவதையாகவே கருதுகின்றேன்.
ஒருவரை கொலை செய்வதும், அவர் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகிப்பதும் ஒன்றேயாகும் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.