புரட்டாசி மாத ராசி பலன்கள்- துலாம் முதல் மீனம் வரை

Report Print Fathima Fathima in ஜோதிடம்
0Shares
0Shares
lankasrimarket.com

துலாம் முதல் மீனம் ராசிக்காரர்களுக்கான புராட்டாசி மாத ராசி பலன்கள் இதோ!

துலாம்

பொதுவாக சட்ட திட்டங்களை மதிக்கும் நீங்கள், நியாயவாதிகளைக் காப்பாற்ற சில நேரங்களில் குறுக்கு வழியில் யோசிப்பீர்கள். ராசிநாதன் சுக்கிரனும், பாக்யாதிபதி புதனும் இந்த மாதம் முழுக்க சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் தீர்வு தெரியாமல் இருந்த பிரச்னைகளுக்கு தெள்ளத் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.

வாகனத்தை சீர் செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். தந்தைவழியில் உதவிகள் உண்டு.

உறவினர், நண்பர்களின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ராசிக்கு லாப வீட்டில் நின்று கொண்டிருந்த சூரியன் இப்போது 12ம் வீட்டில் நுழைந்திருப்பதால் மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருக்கும்.

அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். கோவில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். ஜென்ம குரு தொடர்வதால் கொழுப்புச் சத்துள்ள மற்றும் கார உணவுகளை தவிர்ப்பது நல்லது.

எளிய உணவுகளை உட்கொள்ளுங்கள். காய், கனிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். சின்னச் சின்ன நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

செவ்வாய் சாதகமாக இருப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சகோதரங்கள் உதவுவார்கள். கணவன்மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மனைவி உங்களின் புது முயற்சியை பாராட்டுவார்.

வீடு, மனை வாங்குவதும், விற்பதும் லாபகரமாக அமையும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் தாழ்வுமனப்பான்மை, உத்யோகத்தில் ஈகோ பிரச்சனைகள், விமர்சனங்கள் வந்து போகும்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். பெற்றோர் உங்களுக்கு முழு உரிமை தருவார்கள்.

மாணவ மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களிடம் உணவு, ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.

நண்பர்களின் உதவியுடன் கடையை நவீன மயமாக்குவீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களால் மறைமுக அவமானங்கள் வரக்கூடும். அலுவலக ரகசியங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்துங்கள். கலைத்துறையினரே! உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். விவசாயிகளே! மகசூலை அதிகப்படுத்த நவீன ரக உரங்களை கையாளுவீர்கள். புது இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். விடாமுயற்சியாலும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையாலும் சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 17, 18, 19, 25, 26, 27, 28, 29 மற்றும் அக்டோபர் 1, 3, 5, 6, 7, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

அக்டோபர் 9, 10 ஆகிய தேதிகளில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

தடைகள் பல வந்தாலும் தளராமல் போராடி முன்னேறத் துடித்துக் கொண்டிருக்கும் நீங்கள், மற்றவர்களின் உதவியின்றி சொந்த உழைப்பால் சிகரத்தை எட்டிப் பிடிப்பவர்கள். உங்கள் ராசிநாதனாகிய செவ்வாய் பகவான் இந்த மாதம் முழுக்க உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு உண்டு. அரைகுறையாக நின்று போன பல காரியங்கள் விரைந்து முடியும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள்.

வழக்கு சாதகமாக திரும்பும். பழைய கடனை தீர்க்க புதுவழி யோசிப்பீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சூரியன் வலுவாக அமர்ந்ததால் சிலருக்கு பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு.

கட்டிட வேலையைத் தொடங்குவீர்கள். மூத்த சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஏழரைச் சனி தொடர்வதால் யாராக இருந்தாலும் இடைவெளிவிட்டு பழகுவது நல்லது. திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். திடீர் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள்.

மனைவிக்கு தெரியாமல் வெளியில் எந்த செயலையும் செய்ய வேண்டாம். அதனால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். புதனும், சுக்கிரனும் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் வி.ஐ.பிகள் வீட்டு விஷேங்களில் கலந்து கொள்வீர்கள். கேது 3ம் இடத்தில் தொடர்வதால் துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

குரு 12ல் மறைந்திருப்பதால் தடைப்பட்ட வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கன்னிப்பெண்களே! பெற்றோருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். ஆடை, அணிகலன் சேரும்.

மாணவ மாணவிகளே! கல்யாணம், காது குத்து என்று விடுப்பு எடுக்காமல் படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் கேள்வி கேட்க தயக்கம் வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விளம்பர யுக்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம் கடையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்வீர்கள்.

வேலையாட்களிடம் கறாராக இருங்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்துப் போங்கள். நகை, ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மூலம் லாபம் வரும். உத்யோகத்தில் பரபரப்பாக காணப்படுவீர்கள். சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். மேலதிகாரியின் ஆலோசனையின்றி புது முயற்சிகளில் ஈடுபடாதீர்கள்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களையும் கற்றுத் தெளிவீர்கள். விவசாயிகளே! குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். அரசாங்க சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். டிராக்டர், களப்பையெல்லாம் புதிதாக வாங்குவீர்கள். கடின உழைப்பால் உங்களின் இலக்கை நோக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 18, 19, 20, 21, 28, 29, 30 மற்றும் அக்டோபர் 1, 2, 3, 4, 7, 8, 15, 16, 17

சந்திராஷ்டம தினங்கள் :

அக்டோபர் 11, 12, 13ம் தேதி அதிகாலை 5.42 மணி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

தனுசு

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதிட்டு தவறு செய்தவர்களை தட்டிக் கேட்கும் குணமுடைய நீங்கள், மற்றவர்கள் செய்த உதவியை ஒருபோதும் மறவாதவர்கள். உங்களின் யோகாதிபதியான சூரியன் 10ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும்.

உற்சாகமடைவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புகழடைவீர்கள். வழக்குப் பிரச்னை தீரும். அரசுக் காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடிவடையும். வீடு கட்ட அனுப்பியிருந்த ப்ளான் அப்ரூவலாகும். குருபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். திடீர் செல்வாக்கு, யோகம் உண்டாகும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள்.

சுக்கிரனும் , புதனும் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாகனப் பழுது நீங்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வங்கியில் லோன் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கி அவர்களால் ஆதாயமடைவீர்கள்.

மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். உங்கள் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் சாதகமாக இருப்பதால் உங்கள் பிள்ளைகள் கல்வி, வேலைக்காக அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புறநகரில் ஒருகிரவுண்டு இடம் வாங்குவதற்கான முயற்சிகள் பலிதமாகும்.

ராகு 8லும், கேது 2ம் வீட்டிலும் நிற்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் வேறுவிதமாகப் புரிந்து கொள்ளக் கூடும். எனவே உஷாராக இருங்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுங்கள். மறைமுக எதிரிகள் உருவாகுவார்கள். தண்ணீரை காய்ச்சிக் குடிப்பது நல்லது. வாகனத்தில் கவனம் தேவை. பண விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம்.

அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

மாணவமாணவிகளே! அதிக மதிப்பெண் பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.

வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். ஏஜென்சி, மருந்து, உரம், லாஜிஸ்டிக் வகைகளால் லாபமடைவீர்கள். சூரியன் 10ல் அமர்ந்ததால் உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். விவசாயிகளே! மகசூல் அதிகரிப்பதால் சந்தோஷம் நிலைக்கும். அடகு வைத்திருந்த பத்திரங்களை மீட்க உதவிகள் கிடைக்கும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் குறைந்து ஆக்கப்பூர்வமான பாதையில் பயணிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள் :

செப்டம்பர் 20, 21, 22, 23, 30 மற்றும் அக்டோபர் 1, 2, 3, 4, 9, 10, 11, 12

சந்திராஷ்டம தினங்கள்:

அக்டோபர் 13ம்தேதி அதிகாலை 5.42 மணி முதல் 14, 15ந் தேதி காலை 8.53 மணி வரை சலிப்பு, சோர்வு வந்து நீங்கும்.

மகரம்

மற்றவர்களின் மனம் புண்படும்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதில் அதிக ஆர்வம் காட்டும் நீங்கள், கலகலப்பாக சிரித்துப் பேசி எதிரியையும் தன்வயப்படுத்துவீர்கள். உங்கள் ராசிக்கு யோகாதிபதியான புதனும், சுக்கிரனும் இந்த மாதம் முழுக்க வலுவான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்ப பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

சொன்ன தேதியில் கடனைத் திருப்பித் தருவீர்கள். எதிர்ப்புகள் குறையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை அமையும். கணவன்மனைவிக்குள் அனுசரித்துப் போவீர்கள். மனம் விட்டுப் பேசி பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நண்பர்கள் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள்.

வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி பெருகும். உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் சூரியன் நுழைந்திருப்பதால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனத்தாங்கல் வரக்கூடும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தந்தைவழி உறவினர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உங்கள் ராசிநாதன் சனிபகவான் 11ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பெரிய சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.

உங்களுடைய தனித்திறனும், ஆளுமைத் திறனும், நிர்வாகத் திறனும் அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். இயக்கம், சங்கம் இவற்றில் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குரு 10ல் தொடர்வதால் சின்ன சின்ன அவமானம், எதிர்காலம் குறித்த கவலைகள், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமை போன்றவை நிகழக்கூடும்.

13ந் தேதி வரை செவ்வாய் 8ல் மறைந்திருப்பதால் வாகனத்தில் செல்லும் போது மறவாமல் தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்படும். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். தாயாருடன் மோதல்கள், அவருக்கு முதுகுத் தண்டில் வலி, கணுக்கால் வலி, மூச்சுத் திணறல் வந்து போகும் ஆனால் 14ந் தேதி முதல் செவ்வாய் 9ம் வீட்டில் நுழைவதால் விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். தடைகள் விலகும். தாயாரின் ஆரோக்யம் சீராகும்.

அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சித்து பேசாதீர்கள். கன்னிப் பெண்களே! நட்பு வட்டம் விரிவடையும். பெற்றோர் பாசமழை பொழிவார்கள்.

மாணவமாணவிகளே! உங்களின் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். புதிய நண்பர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.

வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். கட்டிட உதிரி பாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் வகைகள், சமையலறை சாதனங்கள் மூலமாக லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் உஷாராகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும்.

கலைத்துறையினரே! உங்களின் சம்பளம் உயரும்.

விவசாயிகளே! விளைச்சல் கொஞ்சம் மந்தமாக இருக்கும். நெல், வாழை வகைகளால் ஆதாயமடைவீர்கள். சின்ன சின்ன ஏமாற்றங்கள், ஆரோக்ய குறைவு, செலவினங்களை தந்தாலும் ஒரளவு நன்மைகளையும் தரும் மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 23, 24, 25, 26, 27 மற்றும் அக்டோபர் 1, 2, 3, 4, 5, 6, 11, 12, 13

சந்திராஷ்டம தினங்கள்:

அக்டோபர் 15ம் தேதி காலை 8.53 மணி முதல் 16, 17ம் தேதி பிற்பகல் 1.43மணி வரை மற்றும் செப்டம்பர் 18, 19, 20ம் தேதி காலை மணி 6.16 வரை யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.

கும்பம்

எதிலும் புரட்சிகரமாக சிந்தித்து யதார்த்தமான முடிவுகள் எடுக்கும் நீங்கள், பண்பாடு கலாச்சாரத்தை மீறாதவர்கள். குருபகவான் 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். அறிஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வாகனப் பழுது நீங்கும். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். யோகாதிபதி புதன் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் பிள்ளைகளின் திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடிக் கொண்டே போகும்.

சூரியன் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் நுழைந்திருப்பதால் திடீர் பயணங்கள் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசு தொந்தரவுகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வழக்கு சாதகமாகும். 6ம் வீட்டில் ராகு தொடர்வதால் ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் அதிரடி மாற்றம் உண்டாகும்.

பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். செவ்வாய் சாதகமாக இல்லாததால் எதிலும் ஒருவித பயம் இருக்கும். எங்குச் சென்றாலும் எதிர்ப்புகள் அதிகரித்ததைப் போல உணர்வீர்கள்.

உங்களுக்கு தலைக்கணம் அதிகமாகி விட்டதாக முணுமுணுப்பார்கள். முன்கோபம் வேண்டாமே. மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். சகோதரங்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.

உங்கள் ராசிநாதன் சனிபகவான் ராசிக்கு 10ல் நிற்பதால் பெரிய பதவிகளுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். அரசியல்வாதிகளே! உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும்.

கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். பள்ளி, கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள்.

மாணவ, மாணவிகளே! விளையாட்டு, படிப்பு என்று அனைத்திலும் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்களால் அவ்வப்போது குடைச்சல் இருந்தாலும் பிரச்னைகள் பெரிதாக இருக்காது. பெட்ரோல், டீசல், செங்கல் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் தொல்லைகள் அகலும். உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். உங்களிடம் பொறாமைப்பட்டுக் கொண்டிருந்த சக ஊழியர்கள் உங்களின் பரந்த மனசை புரிந்து கொள்வார்கள். குறைக் கூறியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில வேலைகளை விரைந்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினரே! வதந்திகள் ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் உங்களின் விடாமுயற்சியால் சாதித்துக் காட்டுவீர்கள்.

விவசாயிகளே! புதிதாக நிலம் வாங்குமளவிற்கு வருமானம் உயரும். வாய்க்கால் வரப்புச் சண்டை தீரும். திடீர் யோகங்களையும், அதிரடி முன்னேற்றங்களையும் சந்திக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 17, 18, 19, 25, 26, 27, 28 மற்றும் அக்டோபர் 5, 6, 7, 8, 13, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

அக்டோபர் 17ந் தேதி பிற்பகல் 1.43 மணி முதல் மற்றும் செப்டம்பர் 20ம் தேதி காலை 6.16 மணி முதல் 21, 22ம் தேதி பிற்பகல் 1.28 மணி வரை கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.

மீனம்

பூமியைப் போல் பொறுமையும், ஆன்மீக நாட்டமும் உடைய நீங்கள், மறப்போம் மன்னிப்போம் என்றிருப்பீர்கள். செய்நன்றி மறவாதவர்கள். 13ந் தேதி வரை செவ்வாய் 6ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். சொன்ன தேதியில் பணத்தை தந்து முடித்து பழைய கடனில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள்.

ஷேர், ரியல் எஸ்டேட் மூலமாகவும் பணம் வரக்கூடும். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். 22ந் தேதி முதல் புதன் உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர்களால் இருந்த அன்புத்தொல்லைகள் விலகும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.

பழைய நண்பர்களில் ஒரு சிலர் பெரிய பதவியில், பெரிய பொறுப்பில், பொருளாதாரத்தில் பெரிய நிலையில் இருக்க வாய்ப்பிருக்கிறது. அவர்களால் சில உதவிகள் கிடைக்கும். 9ந் தேதி வரை சுக்கிரன் 6ல் மறைந்திருப்பதால் வாகன விபத்துகள் ஏற்படக்கூடும்.

கணவன்மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். 10ந் தேதி முதல் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ல் அமர்ந்து உங்களைப் பார்க்கயிருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். பழுதான வாகனம், மின்சார சாதனங்களை சரி செய்வீர்கள். உங்கள் ராசிக்கு 8ல் குரு மறைந்திருப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். எதுவாக இருந்தாலும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி ஏமாறாதீர்கள். அவ்வப்போது தூக்கம் குறையும்.

நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி செய்ய தவறாதீர்கள். கொழுப்புச் சத்துள்ள, கார உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ராசிக்கு 7ம் வீட்டில் சூரியன் அமர்ந்ததால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட உடல் நலக் குறைவு ஏற்படும். எனவே உணவில் கீரை, காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரின் ஆலோசனையை கேட்டு முடிவுகள் எடுப்பது நல்லது.

மாணவ, மாணவிகளே! நுழைவுத் தேர்விற்கு இப்போதிருந்தே தயராகுங்கள். கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும்.

வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். பங்குதாரருடன் மனக்கசப்பு வந்து நீங்கும். உத்யோகத்தில் பணிகளை முடிப்பதில் அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய விமர்சனங்களும், கிசுகிசு தொந்தரவுகளும் வந்து போகும்.

விவசாயிகளே! பக்கத்து நிலக்காரருடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். வரப்புச் சண்டை, வாய்க்கால் தகராறு என்று நேரத்தை வீணடிக்காதீர்கள். விளைச்சலில் கவனம் செலுத்துங்கள். சுற்றுப்புற சூழ்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:

செப்டம்பர் 18, 19, 20, 21, 28, 29, 30 மற்றும் அக்டோபர் 1, 7, 8, 10, 12, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

செப்டம்பர் 22ம் தேதி பிற்பகல் மணி 1.28 முதல் 23, 24ந் தேதி இரவு மணி 11.13 வரை மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும்.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்