மோடியின் வருகையில் வெளிவந்த உண்மையும்! போலி நாடக சுவாரசியமும்!

Report Print Mawali Analan in கட்டுரை
0Shares
0Shares
lankasri.com
advertisement

அரசுக்காக மக்களா? மக்களுக்காக அரசா? என்ற சந்தேகம் எப்போதும் மிகப்பெரிய கேள்வியாகவே இருந்து வருகின்றது. இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்திப் போனது மோடியின் வருகை.

இந்தியப் பிரதமர் மோடியின் வருகை குறித்து தடபுடல் வரவேற்புகளும், விமர்சனங்களுமே தற்போதைய நிலையில் அதிகமாக காணப்பட்டு வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

advertisement

சர்வதேசத்தில் வல்லரசுக் கனவோடு இருக்கும் சக்திமிக்க ஓர் நாட்டின் சர்வ அதிகாரமும் படைத்த நரேந்திர மோடியின் வருகையானது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் உள்ள நற்புறவை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கை என்பதை நேரடியாகவே காட்டிவிட்டது.

எவ்வாறாயினும் காரணம் இன்றி எதுவும் நடக்காது, மோடியின் வருகையின் பின்னணியில் பல்வேறு பட்ட அரசியல் உள்நோக்கங்கள் இருக்கக் கூடும் என்பது அதிகமானோரின் கருத்து.

மிக முக்கியமாக ஒரு தரப்பு அவரின் வருகைக்கு எதிர்ப்பும், இன்னோர் தரப்பு ஆதரவும் தெரிவித்து கொண்டு பிரச்சாரங்களைச் செய்து கொண்டு வருகின்றனர்.

எது எப்படியோ மோடியின் வருகையால் இலங்கையில் ஏதேனும் வரவேற்கத்தக்க, மக்களுக்கு உணரக்கூடிய, அனுபவிக்கக் கூடிய வகையிலான அபிவிருத்தி மாற்றங்கள் ஏற்படுமாயின் அதற்கு அரசுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள். ஆனாலும் அப்படி நடக்குமா என்பது கேள்விக்குறிதான்.

அதனையும் தாண்டி இந்த மோடியின் வருகையில் பல்வேறுபட்ட சுவாரசியங்களும் உள்ளன, அதாவது மோடியின் வருகை ஜனாதிபதி மற்றும் பிரதரின் நடவடிக்கையினாலேயே சாத்தியப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவு.

நிலைமை இவ்வாறு இருக்க மலையகத்திற்கும் மோடி வருகின்றார், என்ற செய்தியறிந்த மலையக அரசியல் வாதிகளுக்கு அந்தச் செய்தி அறுசுவை கலந்த இலவச விருந்தாகிப்போனது.

அவரவர் தனது தேவைக்கு ஏற்றாப்போல் அரசியல் இலாபங்களுக்காக தான் வரச்சொல்லியே மோடி வருவதாக மலையக அரசியல்வாதிகள் பறைசாற்றி தமக்குத் தாமே புகழாரம் சூட்டிக் கொண்டனர்.

இந்த வேடிக்கையான செயலை அவர்கள் செய்தது மட்டுமல்லாமல், அவர்களின் பேச்சை நம்பித் தங்கள் தலைவன் சிறந்தவன், என ஒவ்வோர் தலைவர் பக்கமும் தனித்தனி கூட்டங்களாக மலையக தமிழர்கள் நின்றதும் வேடிக்கை கலந்த வருத்தமான விடயம்.

அதேபோல மோடியின் வருகையை கருப்புக் கொடி காட்டி எதிர்க்க வேண்டும், எனக் கூறிய கூட்டு எதிர்க்கட்சிச் தரப்பில், தற்போது மகிந்த அவ்வாறு சொல்லவே இல்லை அதில் உள்ளர்த்தம் இருப்பதாக மாற்றுக் கருத்துக் கூறியுள்ளார்.

advertisement
advertisement

இந்தக் திடீர் கருத்து மாற்றம் எதனால், ஒருவேளை மோடிக்கு அல்லது அரசுக்கு அவர்(கள்) பயந்து விட்டார்களா என்பது அவரை கேட்டால் மட்டுமே தெரியும் இரகசிய விடயம்.

இவை அனைத்தும் ஒரு புறம் இருக்கட்டும் பாரதப் பிரமருக்கு இலங்கை கொடுக்கும் அதி உச்ச வரவேற்பு நியாயமானதாகவே இருக்கட்டும், அது இலங்கைக்கு பெருமை சேர்க்கக் கூடிய விடயம்.

ஆனாலும் இந்த வருகை மலையகத் தமிழர்களுக்கு தாங்கள் அரசியல் இலாபங்களுக்காக ஏமாற்றப்பட்டு வருகின்றோம் என்பதை கட்டாயம் புரிய வைக்க வேண்டும்.

அதாவது மலையத்தமிழர்களுக்கு ஆரம்ப காலம் முதல் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருந்து வந்தாலும் மிகப்பெரிய பிரச்சினை அவர்களின் பிரதான எதிரிகள் குளவிகளும், தேனிக்களும்.

மலையகத்தில் குளவிகளுக்கு பஞ்சம் இருக்காது. அவை வேறு எங்கு செல்லும் தேயிலை மலைச் சாரலே அதற்கு வதிவிடம், அவற்றினைக் குறை சொல்வது ஒருவகை சிறுபிள்ளைத் தனம்.

அதேபோல தேயிலையினையே நம்பி வாழும் மலையக மக்கள் வேறு எங்கே போவார்கள் தாங்கள் வாழ்வதற்கு, இதில் அவர்களை குறை சொல்வதும் மறுபக்கம் முட்டாள்த் தனம்.

ஒரு வகையில் அரசின் பார்வைக்கு இருவரும் அதாவது குளவிகளும், மலையகத் தமிழர்களும் ஒரே மாதிரியானர்களே.

காரணம் குளவிகள், தேனிக்கள் தேன்களை சுரண்டும், மலையக மக்களின் உழைப்பை அரசுகள் சுரண்டும் இரண்டும் ஒரு வகையில் ஒரே மாதிரியான தோற்றத்தினையும் அர்த்தத்தினையும் கொண்டது என்பதும் உண்மை.

இந்த இடத்தில் எத்தனையோ வருட காலம் மலையக மக்கள் இந்தத் தேனிக்கள் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரிக்கைகள், போராட்டங்களைக் கூட செய்தனர்.

அதேபோல் தொடர்ந்தும் குளவிகளின் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து வந்தவர்களை அரசோ, அல்லது மோடிக்கு அழைப்பு விடுத்ததாக கூறிக்கொண்ட மலையக அரசியல்வாதிகளோ திரும்பிப் பார்க்கவில்லை.

ஆனாலும் இந்தியப்பிரதமர் மோடி வருவதால் மலையக வீதிகள் புனரமைப்பதும், பாதுகாப்பை பலப்படுத்துவதும் கூட பரவாயில்லை பாதுகாப்பின் உச்ச கட்டமாக பல இடங்களில் குளவிக் கூடுகளும் கலைக்கப்பட்டு விரட்டப்பட்டன.

ஓர் நாட்டின் பிரதமர் என்ற வகையில் இவை செய்யப்பட வேண்டியதே. அதில் எதுவித தவறுமில்லை.

ஆனால் கேள்வி யாதெனின் அந்த குளவிகளால் மனிதனுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற உண்மை இப்போது தான் இலங்கை ஆட்சியாளர்களுக்கு தெரிந்ததா என்பதே?

யார் மீது குளவிகொட்டினாலும் வலி ஒரே மாதிரியாகத்தானே இருக்கும். ஏன் இந்த உண்மை அரசிற்கு இது வரை புரியவில்லை? அரசு இதனைச் செய்ய வில்லை. இந்த இடத்தின் அரசின் அக்கறையற்ற தன்மை வெளிக்காட்டப்பட்டு விட்டது.

advertisement

அதேபோல் இலங்கையின் ஜனாதிபதியும் கூட மலையக விஜயங்களை மேற்கொண்ட போது இந்த விதமான பாதுகாப்புச் செயற்பாடுகள் நடைபெற வில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

advertisement

அடுத்த கட்டமாக மலையகத்திற்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்றால் முதலில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவேண்டும்.,

பின்னர் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும், அதற்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும், ஒதுக்கப்பட்ட நிதி பயனாளிகளுக்கு முழுதாக வந்து சேரவேண்டும். கடைசியாக திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இது தானே அரசுகளின் படிமுறைகள் ஆனால் தனக்கு தேவைப்படும் பட்சத்தில் எதை வேண்டுமானாலும் உடனடியாக அரசுக்கு நிறைவேற்ற முடியும், மலையகத்தமிழர்கள் கண்டு கொள்ளப்படாமல் சுரண்டப்பட்டுக் கொண்டே வந்தார்கள்.

இந்த இரண்டு விடயங்களையும் மோடியின் வருகை தெளிவாக காட்டிவிட்டது. இந்த செயற்பாட்டை இதற்கு முன்னர் செய்திருந்தால் ஆயிரக்கணக்கான அப்பாவி ஏழைகள் பாதிக்கப்படுவது தடைசெய்யப்பட்டிருக்கலாம்.

ஆனால் மோடியின் வருகையின் நிமித்தம் மாற்றங்கள் பல அதுவும் சட்டென்று மாறும் மேகத்தைப்போல ஓர் மாற்றத்தினை செய்கின்றது அரசு.

இதிலும் ஓர் சந்தேகம் மோடிக்காக இதனை செய்ததா? இந்தியாவிற்காக செய்ததா? தனது அரசியல் இலாபங்களுக்காக செய்ததா? தெரியவில்லை. ஆனால் ஓர் விடயத்தை வெளிப்படையாக கூறினால் அது நகைச்சுவையாக மாறிப்போகும்...,

“அதாவது உலகில் பலம் வாய்ந்த நாட்டை ஆட்டிப்படைக்கும் சக்தி வாய்ந்த நபர், பூச்சிகளினால் விரட்டப்பட்டார் என்ற மோடிக்கு வர இருந்த அவப்பெயரை இலங்கை அரசு சாதூர்யமாகவே தடுத்து விட்டது”. என்பதே அது.

மோடி போன்று (இலங்கைக்கு இலாபம் மிக்க) அரசியல் தலைவர்கள் அடிக்கடி மலையத்திற்கு சுற்றுலா வந்து போவார்களானால், 50 வருடங்களிலும் ஏற்படாத மாற்றம் 5 வருடத்திற்குள் மலையகத்தில் ஏற்பட்டுப் போகும்.,

என்ற உண்மையை காட்டிவிட்டது மோடியின் வருகையும், விரட்டப்பட்ட தேனிக்களும், அரசின் கண்ணாம்பூச்சி ஆட்டமும்.

இந்த இடத்தில் மலையக அரசியல் வாதிகள் எங்கே? மேடைகளில் ஏறி பிரச்சாரத்தில் இருப்பார்கள் போலும். யார் எப்படிப் போனால் என்ன தனக்கு தலைப்பொறுப்பும், பதவியும் கிடைத்தால் போதும் என்பதே அவர்கள் நோக்கமா?

நிற்க பாரதப் பிரதமர் மோடியின் வருகையோ? அல்லது மலையக அரசியல்வாதிகளை திட்டித் தீர்ப்பதோ பிரதான நோக்கம் அல்ல. அரசியல் இலாபங்களுக்காக மலையகத் தமிழர்கள் பகடைக்காய்களாக பயன் படுத்தப்படுவது மாற்றம் பெற வேண்டும் என்பது மட்டுமே.

அதேபோல் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழக் கூடிய மலையக மக்கள் வெரும் இயந்திரங்களாக பார்க்கப்படும் நிலை மாற்றம் பெருமா?

அதிகாரங்களும், தலைவர்களும் மக்களுக்காகவே, அவர்களுக்காக மக்கள் இல்லை என்ற பதத்தை ஏடுகளில் மட்டும் இல்லாது செயற்பாட்டிலும் நடைமுறைப்படுத்தப்படுவது யாரால்??

எப்போதோ கட்டிக் கொடுக்கப்பட்ட லயத்து வீடுகளில் இப்போதும் தலைகுனிந்து உள்ளே செல்லும் நிலையில் உள்ள வாசல்களும் திட்டமிட்டே கட்டப்பட்டன போலும்.

அதனாலேயே பல தசாப்தங்களாக ஓர் சுரண்டல் வாழ்வில் முடுக்கப்பட்டிருக்கின்றார்கள். இதனை இல்லை என்று கூறிவிட முடியாது.

இலங்கை சிறப்பான நாடுநான் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை. ஆனாலும் அந்தச் சிறப்பும் “இக்கரைக்கு அக்கறைப் பச்சை போலத்தான்” இருக்கின்றது.

காரணம் ஒருபக்கத் தமிழர்கள் மீது வெளிப்படை அடக்கு முறை, உரிமைப்பறிப்பு அடுத்த பக்கத் தமிழர்களை ஏமாற்றி எழ விடாமல் அடிமைப்படுத்தி எத்தனையோ வருடகாலங்கள் வைத்துள்ளது அந்த வகையில் இலங்கை சிறப்பானதோர் நாடுதான்.

எப்போது உரிமைகள் முழுதும் கிடைத்து தலைநிமிர்கின்றார்களோ வடக்கு கிழக்கு தமிழர்கள்..,

எப்போது ஐயா, சாமி, துரை வார்த்தைகளை தூக்கி எறிந்து சுரண்டல் வாழ்வில் இருந்து மலையகத் தமிழர்கள் மீண்டு வருகின்றார்களோ, அன்று சொல்லட்டும் இலங்கை சுதந்திர நாடு என.

அது வரைக்கும் எப்படி அந்தப் பதத்தின் உண்மைத் தன்மையினை தேடி அறிவது என்பது புதிராகவே இருக்கும்.

எவ்வாறெனினும் பாரதப் பிரதமர் மோடியின் வருகையானது பல்வேறு வகையான அரசியல்வாதிகளின், அரசின் உண்மைத் தன்மையினை தோலுறித்துக் காட்டி விட்டது என்பதே உண்மை நிலை.


மேலும் கட்டுரை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments